முதல்வரே, சர்வாதிகாரி என்பதை நிரூபிக்கவேண்டும் - இராமதாஸ் சாடல்

இராமதாஸ்
இராமதாஸ்
Published on

முதலமைச்சர் ஸ்டாலின் தான் சர்வாதிகாரி எனக் கூறியதை மெய்பிக்கும் நேரம் வந்துவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியிருக்கிறார்.  

”சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவர் மீது கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் நகை திருட்டு குறித்து கொடுத்த புகாரின் பேரில் அவசர அவசரமாக கடந்த ஜூன் 17-ம் தேதி தனிப்படைக்காவலர்கள் 5 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றனர். இவ்வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் புகார்தாரர் நிகிதாவுக்காக அரசின் உயர் பதவியில் உள்ள சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமார் அடித்தே கொல்லப்பட்டார் என்பது தெளிவாகிறது. 

இந்நிலையில் நேற்று கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் தாயார்  மாலதி, பொய் புகார் அளித்த நிகிதாவையும், அவருக்கு சாதகமாக போலிசாரை கொண்டு அஜித்குமாரை கொலை செய்ய தூண்டியவர்கள்மீதும் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

அண்மையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கனிமவளக் கொள்ளையை உலகிற்கு படம்பிடித்துக்காட்ட குளித்தலை அருகே குவாரிக்கு செய்திசேகரிக்கச் சென்ற கதிரவன் என்ற செய்தியாளரையும், அவரின் கேமராமேன் செபாஸ்டியன் உள்ளிட்ட 5 பேர் மீதும் அங்கிருந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் இன்னமும் நடவடிக்கை எடுத்து அக்கும்பலை காவல்துறை கைது செய்யவில்லை. இக்கும்பலை இயக்கியது திமுக எம்.எல்.ஏ.தான் எனக் கூறப்படுகிறது.

அப்படியெனில் “ ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்று முதலமைச்சர் கூறியது அப்பாவி மக்களைப்பார்த்துதானா என்ற கேள்வி எழுகிறது. 

எனவே உடனடியாக கோயில் காவலாளியை தாக்கும்படி காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மற்றும் பொய்புகார் அளித்த நிகிதா ஆகியோருடன்  ஊடகவியலாளர்களை ஒடுக்க நினைத்து செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி  நடவடிக்கை எடுத்து,  நான் சர்வாதிகாரிதான் என்று கூறியதை முதலமைச்சர் மெய்ப்பிக்க வேண்டும்.” என்று இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, “நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு 03.07.2022-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து அவர்களுக்கு சேவை செய்தால், நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதேநேரத்தில் நீங்கள் தவறு செய்துவிட்டால், உங்களைவிட்டு மக்கள் விலகுவார்கள். விலகுவதோடு மட்டுமல்ல, உங்களை புறக்கணிப்பார்கள் என்று பேசியதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.” என்றும் இராமதாசு நினைவூட்டியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com