அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர் ஸ்டாலினோ துணைமுதலமைச்சர் உதயநிதியோ கருணையாகக்கூட பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சாடியுள்ளார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபடமுயன்ற அவர் உட்பட்ட நா.த.க.வினரைக் காவல்துறை கைதுசெய்து பெரியமேட்டில் உள்ள மண்டபத்தில் அடைத்துவைத்தது. பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலைசெய்தது.
அப்போது ஊடகத்தினரிடம் பேசிய சீமான், கடந்த காலங்களில் மாணவி சிறிமதி விவகாரம், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் இந்த அரசாங்கம் சரியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது போராடாமல் நம்பிக்கை வைக்கமுடியும்; ஆனால் அப்படி நடக்கவில்லையே என ஆதங்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை நாடகமென அமைச்சர் கூறியதைப் பற்றிக் கேட்டதற்கு, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது நடத்திய போராட்டமும் நாடகம்தானா என்று அவர் எதிர்க்கேள்வி எழுப்பினார்.