முதல்வர், நடிகையை இழிவுபடுத்திய சி.வி.சண்முகம்- காங்கிரஸ் கண்டனம்!

சி.வி. சண்முகம்
சி.வி. சண்முகம்
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சர் குறித்தும் நடிகை நயன்தாரா குறித்தும் அவமதிப்பாக கருத்து தெரிவித்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்தின் பேச்சை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

”ஒரு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பு வகிக்கும் நிலையில், பெண்களின் மரியாதையை புண்படுத்தும் வகையில் இத்தகைய தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசப்படும் ஒரு மேடையில் கூட இவ்வாறான அவமதிப்பு நிறைந்த பேச்சு இடம்பெறுவது மிகுந்த வேதனையளிக்கிறது.” என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

”இத்தகைய பேச்சுகள் பெண்களை பொருளாக்கும் மனப்போக்கை வெளிப்படுத்துவதோடு, சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கும். ஏற்கனவே, நீதிமன்றம் அவருடைய அவதூறு மற்றும் அநாகரீக பேச்சை வன்மையாகக் கண்டித்தும், அவர் போக்கில் எந்தவித மாற்றமும் தெரியவில்லை. அரசியல் தலைவர்கள் தங்களது பேச்சுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து, பொறுப்புடனும் நாகரிகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

எனவே, திரு.சி.வி.சண்முகம் அவர்கள் தமது கருத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.” என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com