முதல்வர்கள் மாநாட்டால் பலன் என்ன?- வேல்முருகன் கேள்வி

த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன்
த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன்
Published on

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் உரிமைகளுக்குத் தீர்வு கிடைக்குமா? எட்டு கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா என்று வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

“மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை, பேசும் கூட்டமாக மட்டும் இருக்கக் கூடாது.

காவிரி நீர் உரிமை முதல் கல்வி உரிமை வரை, தமிழகத்தின் அடிப்படை மாநில உரிமைகள் அனைத்தும் இம்மாநாட்டில் அழுத்தமாக முன்வைக்கப்பட வேண்டும்.

காவிரி நீரை தமிழகத்திற்கு உரிய அளவில் உறுதி செய்வதுடன், கர்நாடகத்தின் மேகதாது அணை முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்களின் கல்வித் தேவைகளையும், மாணவர்களின் சமூகச் சூழலையும் புரிந்து கொள்ளாத வகையில் ஒன்றிய அரசால் திணிக்கப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறைகள், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கக் கூடாது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வரும் நீட் தேர்வை ரத்து செய்து, மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

நீர், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, நிதி என ஒவ்வொரு துறையிலும் மாநிலங்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்படும் நிலையில், கூட்டாட்சி என்ற வார்த்தை வெறும் அரசியல் அலங்காரமாக இருக்கக்கூடாது.

எனவே, இன்றைய தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் நீர் வள உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளையும் உறுதியுடன் முன்வைத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நீட் தேர்வை ரத்து செய்யவும், காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், தகுந்த தரவுகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com