மோடியா லேடியா எனக் கேட்ட ஜெயலலிதா மீது பிரதமர் திடீர்ப்பாசம்- ஸ்டாலின் கிண்டல்

மோடியா லேடியா எனக் கேட்ட ஜெயலலிதா மீது பிரதமர் திடீர்ப்பாசம்- ஸ்டாலின் கிண்டல்
Published on

தி.மு.க.வின் மேற்கு மண்டல பாக முகவர் மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பேச்சைக் கிண்டலடித்துப் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியது:

வளர்ச்சி என்றாலே பிடிக்காத ஒரு கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. மக்கள் அவர்களைத் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க.வைத் தன்னுடைய கிளைக் கழகமாக மாற்றி அதில் முன்னேறி வரலாமா என்று நினைக்கிறது பா.ஜ.க. பிரதமர் மோடி அவர்கள் திடீர் என்று அம்மையார் ஜெயலலிதா புகழ் பாட ஆரம்பித்திருக்கிறார். எந்த அம்மையார் ஜெயலலிதாவைப் புகழ்கிறார்? “குஜராத் மோடியா? இந்த லேடியா?” என்று சவால்விட்ட அம்மையார்மீது திடீர் பாசம் இன்றைக்கு மோடிக்கு வந்திருக்கிறது.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… அம்மையார் ஜெயலலிதா விட்ட சவால் உங்களுக்கு மறந்துவிட்டதா? இல்லை, “இந்தியாவிலேயே அ.தி.மு.க. அரசாங்கம்தான் ஊழல் அதிகமாக நடக்கும் அரசாங்கம்” என்று உங்களின் நம்பர் 2 அமித் ஷா பேசினாரே அதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்திருக்கலாம்; ஆனால், இது எதையுமே தமிழ்நாட்டு மக்கள்

மறக்கவில்லை.

இதையெல்லாம், மறந்துவிட்டு அல்ல; மறைத்துவிட்டுப் பிரதமர் பேசுவது எதற்காக என்றால், ஒன்றிய பா.ஜ.க.வின் 12 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்று எதுவுமே செய்யவில்லை. சொல்லிக் கொள்ள சொந்தமாகச் சாதனைகள் இல்லாததால் - அம்மையார் ஜெயலலிதாவின் புகழ் பாடினால் வாக்குகள் வருமா என்று பார்க்கிறார்! தேர்தல் வந்துவிட்டதே

என்றுகூட தமிழ்நாட்டிற்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்க மனம் இல்லாத உங்களின் நடிப்பை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக நம்ப மாட்டார்கள்.

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாடு உங்களிடம் கேட்பது என்ன தெரியுமா?

தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மெட்ரோவிற்கு ஏன் அனுமதி தரவில்லை?

கோயில் நகரமான மதுரை மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்துவிட்டீர்களா?

திருச்சி மெட்ரோவிற்கு அனுமதி வழங்க எது தடுக்கிறது?

கேபினட் மீட்டிங்கில் அகமதாபாத் மெட்ரோவிற்கு அனுமதி கொடுத்த நீங்கள், தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு ஏன் அனுமதி தர மறுக்கிறீர்கள்? இது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

எங்களின் கோரிக்கைகளையும் - தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கும் துரோகங்களையும் - ஓரவஞ்சனைகளையும் நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?

ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி எங்கே?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழுமையான நிதியை எப்போது தருவீர்கள்?

பள்ளிக் குழந்தைகளுக்கு சேர வேண்டிய 3 ஆயிரத்தி 500 கோடி ரூபாய் S.S.A. நிதியைத் தராமல் இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்?

ஜல்ஜீவன் இயக்கத்திற்கான மானியம் 3 ஆயிரத்தி 548 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்?

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தர வேண்டிய 2 ஆயிரத்தி 246 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள்?

ஒன்றிய அரசு திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியைக் கூட ஏன் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்?

ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 9 ஆயிரத்தி 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படப் போகிறதே, இது அநியாயம் இல்லையா?

ரிசர்வ் பேங்கில் தமிழ்நாடு அக்கவுண்டில் இருந்த ஆயிரத்தி 709 கோடி ரூபாயை ஒன்றிய அரசு பிடித்தம் செய்தது சரியா?

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 16 ஆயிரத்தி 290 கோடி ரூபாய் இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, கூடுதல் சுமையை ஏற்றியது சரியா?

இதையெல்லாம் செயற்கையான நிதி நெருக்கடி என்று சொல்லாமல், வேறு என்ன என்று சொல்வது?

தமிழ்நாட்டின்மீது வன்மத்தோடு இப்படிப்பட்ட அநியாயங்களை செய்யும் பா.ஜ.க.வோடுதான் கூட்டணி வைத்துக் கொண்டு மாபெரும் துரோகியாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.

தமிழர் விரோதிகளும் - தமிழினத் துரோகிகளும் வைத்துள்ள இந்தக் கூட்டணியை மக்கள்முன் அம்பலப்படுத்தி அவர்களுக்குத் தோல்வியைப் நாம் பரிசாகத் தந்தாக வேண்டும். இதுதான்

நம் முன் இருக்கும் முதல் கடமை.

இப்போது கூட பாருங்கள்! டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தார்கள்! நேர்மையாக நேர் வழியில் தேர்தலை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டார்கள். இன்றைக்கு “அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை” என்று சொல்லி நீதிமன்றமே சொல்லிவிட்டது. மரியாதைக்குரிய அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களும், அவர் கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோதியா அவர்களும் சிறையில் கழித்த நாட்களை பா.ஜ.க.வால் திரும்பத் தர முடியுமா? மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த முடியுமா? இதே ஃபார்முலாவைத் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள்.

தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து நம்மை மிரட்டப் பார்க்கிறார்கள். உங்களின் அரட்டல் மிரட்டலுக்கு பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை, கோழையும் இல்லை! தைரியமாக உங்களை எதிர்கொள்வோம்!

அதனால்தான், மக்கள் மட்டுமல்லாமல் பல கட்சிகளும் நம் மீது நம்பிக்கை வைத்து நம்முடைய கூட்டணியில் இணைகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை குறைவதைத்தான் பார்த்திருக்கிறோம்! அந்த வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கூட்டணியின் பலம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தி.மு.க. மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கவில்லை. யாரெல்லாம் பா.ஜ.க.வின் தமிழ்விரோத அரசியலை எதிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.

பா.ஜ.க.வின் டப்பா இஞ்சின் முன்பு, தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் இஞ்சின் ஒருபோதும் தலைகுனியாது. அதனால்தான், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது, “தமிழ்நாடு அணியா டெல்லி அணியா” என்று சொல்லி பரப்புரை செய்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com