நாடு முழுவதும் அதிகரித்துவரும் நாய்க்கடியால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதில் ராட்வீலர் எனும் இரக நாய்கள் பயங்கரமாகக் கடித்து மோசமான பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இவற்றுக்குத் தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் தலைநகர் சென்னையிலும் ராட் வீலர் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆக்ரோசமான வகை வெளிநாட்டு இனங்கள் என்பதால், வீடுகளில் வளர்க்கப்பட்டாலும் மனிதர்கள் மீது பாய்ந்து தாக்கும் அளவுக்கு வன்மையுடன் இருக்கும்.
இதைப் போலவே பிட்புல் எனும் இரக நாய்களும் வளர்ப்பவர்களைத் தவிர மற்றவர்களை வேட்டை நாய்களைப் போல பாய்ந்து கடிக்கவைத்துவிடுகின்றன.
இதன் காரணமாக, இந்த இரண்டு வகை நாய்களையும் பொது இடங்களில் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் நாய்க்கடி தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்துவரும் நீதிமன்ற உத்தரவால், இந்த நாய்களுக்குத் தடைவிதிக்க இயலாத நிலையில் மாநகராட்சி உள்ளது.
சென்னை துணைமேயர் மகேஷ் அளித்த பேட்டியில், இப்படியான நாய்களுக்குத் தடை விதிக்கவேண்டும் கட்டம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
பழைய தீர்ப்பு குறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.