எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ரூ.1,000, ரூ.5,000 இல்லாமல் பொங்கல் பரிசா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 5 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ”தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது ஆட்சியிலும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணமும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நோய்த்தொற்றின்போது தமிழக மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.2,500 - வழங்கப்பட்டது. மேலும் முழு செங்கரும்பும் வழங்கப்பட்டது.” என்பதுடன்,

“அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2,500 - போதாது என்றும், 5,000 - ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்றும் ஊடகங்களில் பேட்டியளித்தார்.” என்றும் நினைவூட்டியுள்ளார். 

”ஆனால், 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பரிசும் வழங்கவில்லை. உருகிய வெல்லம், பல்லி விழுந்த புளி, கலப்பட மிளகு என்று, தமிழக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை மட்டும் வழங்கி தமிழக மக்களின் கேலிக்கு உள்ளானார். கடந்த ஆண்டு பொங்கலின்போது, பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, ஏலக்காயுடன் ரொக்கப் பணமாக ரூ.1,000 - மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் இந்த அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.1,000 -ஐ வழங்க வேண்டும்.

எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5,000 - வழங்க வேண்டும்.

தற்போதைய கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000 - வழங்க வேண்டும்.

பொங்கலுக்கு ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்தது. இதனால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்.” என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com