என்.எல்.சி.யின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி இந்தியா) பங்குகளை செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 3 சதவிகிதம் வரையிலான பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எடுத்துள்ள முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
என்.எல்.சி. நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நவரத்தின பொதுத்துறை நிறுவனமாகும். மாநில அரசின் நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடும் பல தசாப்தங்களாக இயங்கி வருகிறது. தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழகத்தின் தேவையைத் தாண்டி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களின் மின் தேவையையும் பூர்த்தி செய்து வருவதோடு இந்நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் சில இடங்களில் உள்ளன. இந்நிறுவனத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும். நிகழாண்டு ரூ. 3,670 கோடி லாபத்தை ஈட்டி மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. இப்படி சிறப்பாக செயல்படும் நிறுவனத்தின் மூன்று சதவிகித பங்குகளை ஒன்றிய அரசு விற்பது என்பது பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு நாட்டில் இயங்கும் நெடுஞ்சாலைகள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், வங்கி, இன்சூரன்ஸ் என லாபம் ஈட்டிவரும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களை தேசிய பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்த்து வருவதன் தொடர்ச்சியாகவே தற்போது என்.எல்.சி. நிறுவனத்தின் 3 சதவிகித பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. என்.எல்.சி.யின் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது நல்ல அம்சமாகும்.
ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பு, கல்வி, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி பறிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தேர்வு என தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வரும் நிலையில் தற்போது நவரத்தின பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. பங்குகளையும் விற்பனை செய்வது என்பது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.
எனவே, ஒன்றிய பாஜக அரசு 3 சதவிகித என்.எல்.சி. பங்கு விற்பனை செய்யும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களும், ஊழியர்களும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்பவேண்டும்.” என்றும் பெ.சண்முகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.