ரூ.80 கோடி வசூலித்துத் தர கல்வித் துறைக்கு உத்தரவா?

Published on

பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித் துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா என பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 


”தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு  நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள்  ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக  வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது.” என்று அவர் சாடியுள்ளார். 

”ஒரு மாநிலத்தில் கல்வித்துறை செழிக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு  ரூ.2.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 1.31%,  அதாவது ரூ.46,767 கோடி  தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கல்விக்கு நிதி ஒதுக்குவதில்  தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.

இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும்,  ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை  கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com