வட மாநிலத் தமிழர்களுக்கு பேரபாயம் - நெடுமாறன் கவலை!

Nedumaran
பழ. நெடுமாறன்
Published on

பிரதமரின் சர்ச்சைப் பேச்சால் வட மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குப் பேரபாயம் ஏற்பட்டுள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அச்சம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் வாழும் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாக தலைமையமைச்சர் மோடி பீகார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

”தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு முயற்சிகளும், பா.ச.க. காலடித் தடத்தைப் பதிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவாக மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

அதுமட்டுமல்ல, தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களிலும் பீகாரிகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். சுருக்கமாகக் கூறினால், இந்தி பேசும் மக்களைத் தென்னாட்டு மக்களுக்கு எதிராகக் குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடும் முயற்சியில் நாட்டின் தலைமையமைச்சரே ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இவருடைய பேச்சின் விளைவாக வட மாநிலங்களில் வாழும் தமிழர்களும், பிற தென்னாட்டு மக்களும் தாக்குதலுக்கும், பிற கொடுமைகளுக்கும் ஆளாகும் பேரபாயம் தோன்றியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ள அவர், 

”இதுவரை மத ரீதியில் முசுலிம்களுக்கு எதிராக இந்து வெறியைத் தூண்டுவதில் ஈடுபட்ட தலைமையமைச்சர் மோடியும், இந்துத்துவா கூட்டமும் இப்போது தமிழர்களுக்கு எதிராக வடமாநிலத்தவரைத் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவின் தலைமையமைச்சர் என்ற பெரும் பொறுப்பில் அமர்ந்திருக்கக் கூடிய மோடி, இத்தகைய கீழ்த்தரமானதும் பொறுப்பற்றதுமான செயலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.” என்றும் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com