
”தமிழகத்தில் பீகாரி மக்கள் துன்புறுத்தப் படுவதாகவும், அவமதிக்க படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருப்பது, முழுமையாக ஆதாரமற்றது அரசியல் நோக்கம் உடையது” என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு என்றென்றும் மொழி, மத, இன வேறுபாடு கடந்து, ஒற்றுமையுடன் வாழும் மண்ணாக திகழ்கிறது. ஆனால் உண்மையில், 2014 ஆம் ஆண்டு முதல், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பின்னர், வட மாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம், தமிழ்நாட்டில் வேகமாக நடைபெற்று வருகிறது. இது சாதாரண வேலைவாய்ப்பு தேடல் அல்ல . தமிழகத்தின் மக்கள் தொகை அமைப்பை மாற்றி, வருங்காலத்தில் இந்தி பேசும் வாக்காளர் அடிப்படையை உருவாக்கி, மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் நடக்கும் திட்டமிட்ட அரசியல் சதி.” என்று சாடியுள்ளார். 
”இதனிடையே பல வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது காவல் துறைப் பதிவுகள் மூலம் வெளிவந்துள்ளன. ஆனால், அதைப் பற்றிப் பிரதமர் மோடி அவர்கள் ஒரு சொல்லும் கூறாமல், மாறாக தமிழ்நாட்டு அரசையும், மக்களையும் குற்றம் சாட்டும் வகையில் பேசியிருப்பது மிகுந்த பொறுப்பில்லாத, தமிழகத்தின் மரியாதைக்கு எதிரானது ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறிய இந்தப் பொய்யான, பிரிவினையை ஊக்குவிக்கும் பேச்சைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மோடி அவர்கள் உடனடியாக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
2014-க்குப்பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வடமாநிலத்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றம் குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு உரிமை மற்றும் வாக்குரிமை அமைப்பைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு, தமிழ்நாடு அரசு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இந்தி ஆட்சியைத் திணிக்கும் பாசிச அரசியல் சதிகளுக்கு எதிராக தமிழர் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும்.” என்றும் வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
