வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள், மாணவர்கள் தவித்துவருகின்றனர் என்றும் ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.
”அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு என்பதை ரத்து செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு நிர்வாகத்தில், 'வருவாய்த்துறை' என்பது மக்களோடு நேரடியாக தொடர்பில் உள்ள துறை. அதுவும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார் போன்றவர்கள் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள் ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
இதனால் ஜாதி சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி சான்றிதழ் பெற வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் போன்ற முக்கியமான சான்றிதழ்களைப் பெற முடியவில்லை. இணைய வழியிலும் சான்றிதழ்களைப் பெற முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.” என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
”தற்போது பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் புதிதாக பிள்ளைகளை சேர்க்கவும், 10ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கவும், 12ம் வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேரவும், பல்வேறு நுழைவுத் தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை எழுதவும் பல்வேறு சான்றிதழ்களை வருவாய்த்துறையில் பெற வேண்டியுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் வேலைநிறுத்தம் நடப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
வருவாய்த் துறை அலுவலர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் உள்ள திமுக அரசு, கூட்டணி அமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. யாருக்கு எத்தனை இடங்களை கொடுக்கலாம், யாருக்கு எத்தனை இடங்களை குறைக்கலாம் என்பதிலும், கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனியும் தாமதிக்காமல் வருவாய்த்துறை அலுவலர்களின் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.” என்று வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.