வழக்கறிஞர்களிடம் ஒற்றுமை காக்கப்பட வேண்டும்- சண்முகம் அக்கறை!

பெ. சண்முகம்  - தொல். திருமாவளவன்
பெ. சண்முகம் - தொல். திருமாவளவன்
Published on

சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் நிகழ்ந்த சம்பவத்தை முன்னிட்டு பிரச்னை உருவானநிலையில், வழக்கறிஞர்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தையொட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் சாதிய ரீதியாகப் பிரிந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கவலையை வெளிப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”நீதித்துறையின் மீது இந்துத்துவ சக்திகள் தாக்குதல் நடத்துவது, அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை எதிர்த்தும் வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், வழக்கறிஞர்களின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நிகழ்வுகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பார்கவுன்சில் என்பது வழக்கறிஞர்களின் பாதுகாப்புக்கான அமைப்பாகும். சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நடந்துகொண்டதும், பார் கவுன்சில் அலுவலகத்தில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்திருப்பதும் முற்றிலும் ஏற்புடையதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

நடைபெற்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்கவுன்சில் விசாரணைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்.” என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com