வழக்கு போட்டால் இடமாற்றமா?- கொதிக்கும் டாக்டர்கள்!

வழக்கு போட்டால் இடமாற்றமா?- கொதிக்கும் டாக்டர்கள்!
Published on

தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடிய 18 அரசுத் துறை கால்நடை மருத்துவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 3000 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இதில் கணிசமானவர்கள் தங்களின் தற்காலிகப் பணிக்காலத்தை கணக்கில் கொள்ளவேண்டும் என்றும், சிலர் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். பல்வேறு துறைகளிலும் இதே போல அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்துவருகின்றன.  

இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறையில் வழக்கு தொடுத்திருந்த ஒன்பது வழக்குகளில் 18 பேர் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்.

நிர்வாகக் காரணம் என்கிற பெயரில் 200 கி.மீ. தொலைவுக்கு மேல் இடமாறுதல் செய்து கால்நடைப் பராமரிப்புத் துறை இயக்குநர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றப்பட்டவர்களில் இரண்டு பெண் மருத்துவர்களும் அடக்கம்.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள கால்நடை மருத்துவர்கள், நீதித்துறையை நாடுவதாலேயே ஒருவரை இடமாற்றம் செய்வது மிக மோசமான முன்னுதாரணம் என குமுறுகின்றனர்.

“நீதிமன்றங்களை நாடும் உரிமைதான் இந்திய அரசியல் சாசனத்தின் இதயம் போன்றது என அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் குறிப்பிட்டார். திராவிட மாடல் தமிழக அரசு தங்களது உரிமைகளுக்காக, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி தங்களது உரிமைகளைப் பெற்றுவருகிறது.

ஆனால், தங்களது நிர்வாகத்தின் கீழ் பணி செய்யும் அரசு ஊழியர்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடினால் அதைக் குற்றமாகக் கருதி தண்டனை அளிக்கிறது. அதன் மூலம் தங்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப்பெற அழுத்தம் கொடுக்கிறது.

இது எந்தவகையில் நியாயம் என பாதிக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் தவித்துவருகின்றனர்.” என்று பாதிக்கப்பட்ட கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com