வாக்குச்சாவடியில் கவனம்- தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் கட்டளைகள்!

Published on

நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிதொடர்பான பணிகளில்ஈடுபடும்தி.மு.க.வினருக்கு அக்கட்சியின்தலைவர் மு.க.ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

கடித வடிவிலான அறிக்கையில் அவர் கூறியதன் விவரம்: 

”அன்பு உடன்பிறப்புகளே.. நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும்.

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணி கண்காணிப்பகத்தின் (War Room) மூலமாக உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்படும் தகவல்கள், வாக்குப்பதிவு நாளன்றும் தொடர்ந்திடும். கழகத்தின் சட்டத்துறை சார்பில் கண்காணிப்பகத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு நாளில் பணியாற்றும் பூத் ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.

கழகத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

வாக்கு பதிவன்று BLA 2 மற்றும் BLC, BDA ஆகியோர் தங்களது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், தங்களது பாகத்தில் உள்ள கழக ஆதரவு, தோழமைக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளையும், விரைந்து பதிவு செய்திடவும் ஒருவர் கூட விடுபடாத வகையிலும் கழக நிர்வாகிகள் ஆவன செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) எக்காரணத்தை முன்னிட்டும் ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17C-இல் கையொப்பமிடக் கூடாது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும்.

வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் CU, பேலட் யூனிட் BU, வாக்குப்பதிவை சரிபார்க்கும் காகிதங்கள் நிறைந்த VVPAT ஆகியவை கேபிள் மூலம் இணைக்கப்பட்டு, சீல் சேதமடையாமல் அவை சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்

மாதிரி வாக்குப்பதிவு (MOCK POLL) நடைபெறும்போது, மிகவும் கவனமாக அதில் கழகத்தின் பூத் ஏஜெண்ட் பங்கேற்பதுடன், , VVPAT காகிதச்சீட்டுகளை EVM எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அவை அழிக்கப்பட வேண்டும். அப்போது இயந்திரத்தில் “ZERO” என்று காட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மாதிரி வாக்குப்பதிவு சீட்டுகளைத் தனியாக பிங்க் காகித கவரில் (PPS) வைத்து சீலிடப்பட்டு தேர்தல் அதிகாரியுடன் முகவரும் கையொப்பம் இட வேண்டும்.

வாக்குப்பதிவுக்காக வழங்கப்பட்ட காகித முத்திரைகளின் வரிசை எண் மற்றும் எண்ணிக்கையையும் (CU+BU+VVPAT எண்கள் போன்றவை) இயந்திரங்களில் ஏதேனும் ஒன்று மாற்றம் செய்யப்பட்டால் அதன் விவரத்தையும் வாக்குப்பதிவு முடிந்தபிறகு குறிப்புப் பட்டியலில் பதிவிட்டு, தலைமை அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பமிட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரம் முடிவடையும் தறுவாயில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, பின்பு CU பட்டனில் Close என்று தேர்தல் அதிகாரி அழுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17C உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும்.

கடைசியாக, படிவம் 17C நகல் பெற்று CU + BU + VVPAT இயந்திரங்கள் சீலிடப்பட்டு, அவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு (Strong Room) மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் படிவம் 17C நகலினை தவறாமல் பெற்று அதன் அசலினை வேட்பாளர் வசம் சேர்க்க வேண்டும். மென்நகலினை (Soft Copy) தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் எந்த ஒன்றையும் தவறவிடாமல் விழிப்புடன் இருந்து கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடியில் கழகத்தினர் கண்ணியமான முறையிலும், கவனமான வகையிலும் தங்கள் பணியை மேற்கொண்டு, நமக்கு ஆதரவான ஒரு வாக்குகூட விடுபடாதபடி செயல்பட வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com