தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இன்னும் 40 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கனவுகளை கேட்கப் போவதாக கூறுவதெல்லாம் காற்றில் கம்பு சுழற்றும் வேலை தான் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
” தமிழ்நாடு அரசின் சார்பில் உங்கள் கனவைச் சொல்லுங்கள் என்ற திட்டம் வரும் 9-ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின்படி 12 முதல் 29 வயது வரையுள்ள இளைஞர்களின் கனவுகள் என்ன? என்பது கேட்கப்பட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கான கொள்கைகள் அடுத்த ஆட்சியில் வகுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளையடித்து வரும் திமுக ஆட்சியாளர்கள் மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது தான் சான்று.
12 வயது முதல் 29 வயது வரையுள்ள இளைஞர்களின் கனவு என்னவாக இருக்க முடியும்? தரமான கல்வியும், கண்ணியமான வேலையும் தான் அவர்களின் கனவாக இருக்க முடியும். ஆனால், அரசு பள்ளிகளை மூடியும், ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமலும் பள்ளிக்கல்விடை சீரழித்தது திமுக அரசு தான். திமுக ஆட்சியில் மட்டும் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 16 லட்சம் குறைந்துள்ளது. அரசு கல்லூரிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு பேராசிரியரைக் கூட நியமிக்காததால் அங்கும் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. கூவிக் கூவி அழைத்தாலும் அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர எவரும் தயாராக இல்லை என்ற அளவுக்கு கல்வித்துறையை சீரழித்திருக்கிறது திமுக அரசு.
ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத்துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை 7 லட்சமாக அதிகரித்திருக்கிறது. ஆனால், ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் பேருக்குக் கூட நிரந்தர வேலை வழங்கப் படவில்லை. தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் தகுதிக்குரிய வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்களின் தேவையை நிறைவேற்றாமல் வேறு என்ன கனவை நனவாக்கிக் கிழிக்கப் போகிறது திமுக அரசு?
தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக இன்று வரை அதை நிறைவேற்ற வில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை வெள்ளமாக பாயவிட்டு இளைஞர்களை சீரழித்ததை விட பெரும் தீமை இருக்க முடியாது. போதையில்லா தமிழகம் வேண்டும் என்பது தான் இளைஞர்களின் பெரும் கனவு. அதை நிறைவேற்ற கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு என்ன செய்தது?
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 98 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், திமுக ஆட்சியில் வெறும் 66 வாக்குறுதிகள், அதாவது 13 விழுக்காடு வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப் பட்டுள்ளன என்பதை பட்டியலிட்டு எங்கே விடியல்? என்ற தலைப்பிலான ஆவணத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிட்டேன். கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் இந்த ஆவணம் சென்னையில் வெளியிடப்பட்டது.
அதன்பின் 5 மாதங்களாகி விட்ட திமுக அரசுக்கு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை இருந்தால், இதுவரை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த காலத்தில் ஒரே ஒரு வாக்குறுதியைக் கூட முழுமையாக நிறைவேற்றாத திமுக அரசு, தேர்தல் அறிவிப்பு வருவதற்கு இன்னும் 40 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கனவுகளை கேட்கப் போவதாக கூறுவதெல்லாம் காற்றில் கம்பு சுழற்றும் வேலை தான். இதுவரை அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையே ஐந்தாண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசு, இப்போது இளைஞர்களின் கனவுகளை அறிந்து நிறைவேற்றப்போவதாக கூறுவது வெட்கக்கேடு.” என்று அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.