
இலாட்டரி அதிபராக இருந்த பிரபல தொழிலதிபர் கோவை மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற வி.சி.க. மாநாட்டில் அக்கட்சியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு வி.சி.க.வில் முக்கியத்துவமான இரண்டாம் நிலைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
“வெல்லும் சனநாயகம் மாநாட்டின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ‘ வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனத்தின் உரிமையாளர் திரு ஆதவ் அர்ஜுன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டார்.” என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆதவ் அர்ஜூன் வி.சி.க.வின் சமூக ஊடகப் பணிகளைப் பரவலாக்குவதற்காக அக்கட்சியின் சார்பில் கூட்டாகப் பணியாற்றிவந்தார். வெளிச்சம் தொலைக்காட்சி அலுவலகத்தில் அவருடைய குழுவினருக்கு இடம் ஒதுக்கப்பட்டு, அதில் அவர்கள் செயல்பட்டுவந்தனர்.
ஏற்கெனவே, மார்ட்டினின் ஒரு மகன் பா.ஜ.க.விலும் இன்னொருவர் தமிழர் விடியல் கட்சி என தனிக் கட்சி நடத்திவரும் நிலையில், அவர்களின் குடும்பத்திலிருந்து புது முகமாக அர்ஜூன் அரசியல் கட்சியின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. அணியில் வி.சி.க. சார்பில் ஒரு பொதுத்தொகுதி வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகுதியில் அர்ஜூன் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.