விஜயகாந்தை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று முற்பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார்.
பிரச்சாரத்துக்கு மற்ற தலைவர்கள் வரும்போது எந்தத் தடையும் இருப்பதில்லை; விஜய் மட்டும் வழக்கு போட்டிருக்கிறார்; ஆளும் கட்சியில் அவருக்கு எதிராக இருக்கிறதா அல்லது அவர் பிரச்சாரம் நடத்திய விதம் சரியில்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
”ஒரு நடிகராக 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததால் அவரைப் பின்பற்றுகிறவர்கள் ஏராளமானவர்கள் இருப்பார்கள்; இப்படி உச்ச நட்சத்திரமாக இருப்பவர்களுக்கு கூட்டம் கூடுவது இயற்கை; இதை இன்னும் கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கமுடியும். ஒரே நாளில் மூன்று தொகுதிகள் என்கிறார்... இதனால் பிரச்னைதான். மக்கள் போக்குவரத்து மாட்டிக்கொண்டு அவதி... அவரைப் பார்க்க வந்தவர்கள் பார்க்கமுடியவில்லையே என ஒரு பக்கம்... இதெல்லாம் வழக்கமானதுதான்.” என்று பிரேமலதா கூறினார்.
விஜய்க்குப் பதில்சொன்ன அமைச்சர்கள் விஜயகாந்த் எப்படி ஆனாரோ அந்த நிலைதான் விஜய்க்கும் ஆகும் எனக் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, ” விஜய் பா.ஜ.க., தி.மு.க. இரண்டையும் குறைசொல்கிறார். விஜயகாந்த் தானாகக் கட்சி தொடங்கி உழைத்து முதல் ஆண்டிலேயே 8.33 சதவீதம் வாக்குகள் பெற்றார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் 10.33 சதவீதம் வாக்குகளை நிரூபித்தார். குறைந்த காலத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். அவரை மற்றவர்களுடன் ஒப்பிடவே கூடாது.” என்று பிரேமலதா கூறினார்.