அ.தி.மு.க.வைக் குறைகூறி நடிகர் விஜய்யோ அவரின் த.வெ.க.வோ கருத்து எதையும் வெளியிடவில்லை எனப் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய் அப்படிச் செய்யமாட்டார் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
”அ.தி.மு.க.வைப் பற்றி த.வெ.க. பேசாது என்று சொன்னால் உங்களுக்கு என்ன கஷ்டம்... ஏன் அ.தி.மு.க.வைப் பற்றிப் பேசவில்லையென எல்லாருமே துடிக்கிறார்கள்.” என்று சிரித்தபடியே பதில் அளித்தார், பழனிசாமி.
”ஏற்கெனவே நான் தெளிவுபடுத்திவிட்டேன். அ.தி.மு.க. அரசு நிறைய திட்டங்களைக் கொண்டுவந்தது. அப்படிப்பட்ட கட்சியை, அரசாங்கத்தை அவர் எப்படி விமர்சிப்பார்? அதில் என்ன குற்றம் கண்டுபிடித்தார்கள்? ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த அடிப்படையில்தான் அவர்கள் பேசுவார்கள்.” என்றவர்,
”அதனால் அந்தக் கட்சியைப் பேசவில்லை, இந்தக் கட்சியைப் பேசவில்லை என மற்றவர்கள் ஆதங்கப்பட வேண்டிய அவசியமே இல்லை.” என்றும் கூறினார்.