
த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் இன்று காலையில் சென்னை பெரம்பூரில் தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பின்னர் முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதிக்கு அவர் சென்றார். அங்கு மிகக் குறைவான நேரமே அவர் பேசினார்.
அதன்பிறகு, வில்லிவாக்கம் தொகுதியில் சிட்கோ நகர், அண்ணா நகர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால், ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் இத்தொகுதியில் அவரின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் அதற்கு விளக்கமளித்து வருத்தமும் தெரிவ்த்தார்.
இந்த நிலையில், விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் இதுகுறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்:
”இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.” என்று என்.ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.