விவசாயிகளைக் கைதுசெய்வதை நிறுத்துங்கள்!

Published on

”பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகளைக் ‘‘கைது’’ செய்வதை நிறுத்தவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

” இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயம் என்பது அதிகம் இடர்ப்பாடுகள் உள்ள தொழில்! காலநிலை மாற்றம், திடீர் மழை, மேகவெடிப்பு, வெள்ளம், புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து விலை உயர்வுகள், டிராக்டர் வாடகை, பணியாட்களுக்கான செலவுகள் என்று ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்லும் செலவுகள், நல்ல விளைச்சல் கிடைத்தாலும் விலையில் ஏற்படும் வீழ்ச்சி என்று போட்ட முதலீட்டைத் திரும்ப எடுப்பதில் ஏராளமான சிக்கல்கள் நிறைந்தது இந்திய விவசாயம். இத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் பல கோடிக்கணக்கான மக்கள் இன்றும் விவசாயத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கருதுகின்றனர்.

தண்ணீர் திறந்தும், விவசாயிகளுக்கு எந்தப் பயனில்லை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆற்றுநீர்ப் பாசனத்தில் காவிரியின் பங்கு பெரியது. ஆனால், கருநாடக அரசின் பிடிவாதம் காரணமாகவும், தமிழ்நாடு அரசின் அணுகுமுறைக் குறைபாடுகள் காரணமாகவும், ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட வேண்டிய நீர், செப்டம்பர் ஒன்றாம் தேதி தான் திறக்கப்பட்டது. இதனால், டெல்டா விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க. -ஆட்சியில் வந்து அமர்ந்ததும், 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை பெறப்பட்ட ரூ.75,000 வரையிலான கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது.

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

இதனால், முழுமையான பலன் கிட்டாது என்பதால், விவசாயிகள் கடந்த மே மாதம் முதலே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (15.9.2026) திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த நிலையில், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையும் நேற்று தோல்வி அடைந்தது.

போராட்டத்தைத் தொடர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனியார் ஒருவரின் நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெய்யில் கொடுமையால் பனை ஓலையைத் தலைக்கு வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பெரிதும் கவலைக்குரியதாகும். மேலும், பல இடங்களில் போராட்டத்திற்குக் கிளம்பிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது நியாயமானது அல்ல!

விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. ஆட்சிக்கு வரும் முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறுதானே கோருகின்றனர். அதற்குக் காதுகொடுக்க வேண்டியது அரசின், முதலமைச்சரின் கடமை அல்லவா? இன்னல்களுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொள்ளும் விவசாயம் இல்லாவிட்டால், நமது நிலைமை என்ன? மேலும், தொடங்கியுள்ள சூப்பர் எல்நினோ எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தப் போகிறது என்ற அச்சம், அனைத்துத் தரப்பினரிடமும் இருப்பதைப் போல, விவசாயிகளிடையே அதிகம் இருக்கும் சூழலில், அவர்களின் சூழலை, நெருக்கடியைப் புரிந்துகொள்ள வேண்டியது ஓர் அரசின் கட்டாயக் கடமையாகும். கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை விடுவிப்பதுடன், அவர்களது போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்து பயிர்க் கடன்களை முழுமையாகத் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று வீரமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com