‘வெற்றிப் பயண’த்தில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பா? – பேராசிரியர் தீபக் நாதன் கேள்வி

‘வெற்றிப் பயண’த்தில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிப்பா? – பேராசிரியர் தீபக் நாதன் கேள்வி
Published on: 

”மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள திட்டம் தொடர்பான செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் குறித்து எவ்விதக் குறிப்பும் இடம்பெறாதது ஏன் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மாற்றுத்திறனாளிகளுக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னரும், இன்று நடைமுறைக்கு வரும் இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையே இடம்பெறாதது மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

சட்டமன்றத்தில் அழுத்தம் ஏற்பட்ட பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, நடைமுறைக்கு வரும் நாளில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அவர்களைப் பற்றி குறிப்பிடாமல் இருப்பது, அந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்புக்காக வழங்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவி செய்யும் குடும்பத்தினரும் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தித்தான் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கும் கட்டணமில்லா பயண வசதியை வழங்குவதால் தமிழக அரசுக்கு என்ன பெரிய நிதிச்சுமை ஏற்படப்போகிறது?

மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கையை சட்டமன்றத்தில் ஏற்படுத்திவிட்டு, தற்போது அவர்களைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் திட்டத்தை செயல்படுத்துவது நியாயமற்றது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், சட்டமன்றத்தில் வழங்கப்படும் அறிவிப்புகள் வெறும் வாக்குறுதிகளாகவே மாறிவிடும்.

மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் புறக்கணிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடருமானால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை அரசு எந்த அளவுக்கு முன்னுரிமையுடன் நடத்துகிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது.

எனவே, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும். அதற்கான தெளிவான அரசாணை அல்லது அதிகாரப்பூர்வ நடைமுறை அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட அறிவிப்பு செயல்படுத்தப்படுகிறதா அல்லது வெறும் அறிவிப்பாகவே நிற்கப்போகிறதா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.” என்று பேராசிரியர் தீபக் நாதன் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com