சீமான்
சீமான்

வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் பொறியியல் பணித் தேர்வா? -தள்ளிவைக்கச் சொல்லும் சீமான்!

பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தவிருக்கும் பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

“ சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பொருட்சேதத்தால் மக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்புக்கு ஆளானதோடு, முக்கிய அரசு ஆவணங்கள், அடையாள அட்டைகள், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் பறிகொடுத்துள்ளனர்.

இத்தகைய நெருக்கடி மிகுச்சூழலில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமானது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 369 பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்காமல் அவசரகதியில் ஜனவரி 6 ஆம் தேதியே நடத்த முடிவெடுத்திருப்பது தேர்வர்களிடையே பதற்றத்தையும், பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட கனமழை வெள்ளப் பாதிப்புகளைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசே வலியுறுத்தும் அளவிற்கு மிக மோசமான பாதிப்புகளை தமிழ்நாட்டு மக்கள் சந்தித்துள்ள நிலையில், அவசர அவசரமாக பொறியாளர்கள் பணித்தேர்வினை அரசுத் தேர்வாணையம் நடத்துவது ஏன்? பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பல்வேறு அரசுப் பணித்தேர்வுகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொறியாளர் பணித் தேர்வினை மட்டும் ஒத்தி வைக்க தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, கனமழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராதச் சூழலில் சனவரி மாதம் அவசரகதியில் நடைபெறவுள்ள பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வினை ஒத்தி வைக்கும் அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினை வெளியிடச் செய்து, தேர்வர்களின் நலன் காக்க வேண்டும்.” என்று சீமான் தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com