மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அரசியல் கட்சிகள் பலவும் குறைகூறியிருந்தன. அதையடுத்து, அரசால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக பட்டியலிட்டு பதில் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
“ 25.10.2024 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டது. இன்று (26.10.2024) காலை 8.30 முடிய மதுரை மாவட்டத்தில் சராசரியாக 4.73 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சித்தம்பட்டி, இடையம்பட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், குப்பனம்பட்டி, கள்ளந்திரி, தள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 10 செ.மீ. வரை கனமழை பதிவானது.
இதன் காரணமாக 20 பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக குறைந்த கால அளவில் பெய்த கனமழையின் காரணமாக மதுரை மாநகராட்சிப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள செல்லூர், விளாங்குடி, ஆனையூர் பகுதிகளில் 374 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
மதுரை மாநகராட்சியும், மாவட்ட நிருவாகமும் ஒன்றிணைந்து பொதுமக்களை வெளியேற்றி 5 நிவாரண முகாம்களில் 161 நபர்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். மேலும், பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இதுவரை 5215 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் 74 மருத்துவ முகாம்களும், 44 கால்நடை மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அன்று இரவே முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்தார்.
துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
கனமழையினைத் தொடர்ந்து தேங்கிய மழை நீரை வெளியேற்ற 38 நீர் இறைப்பான்கள் மற்றும் 44 JCB இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், செல்லூர் கண்மாயிலிருந்து உபரி நீரை வைகை ஆற்றிற்கு கொண்டு செல்ல புதிதாக கால்வாய் அமைக்கக்கப்பட்டுள்ளது. ஆணையூர் பகுதியில் உள்ள முடக்கத்தான் கால்வாயில் ஏற்பட்ட சிறு உடைப்பு உடனடியாக நீர் வள ஆதாரத் துறையால் சரி செய்யப்பட்டது. கண்ணநேந்தல் நாகனாகுளம் சின்ன கண்மாயில் நீர் நிரம்பிய நிலையில் உபரி நீர் கால்வாய் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு ஆத்திக்குளம் கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டது.
செட்டிக்குளம் தேவி நகர் குடியிருப்பு பகுதி, கோவில் பாப்பாக்குடி கிராமம் சத்யா நகர், தினமணி நகர் பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற ஊராட்சி நிருவாகத்தினால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நீர் தேங்கிய பகுதிகளில், மழை நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 102 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் பருவமழை பாதிப்புகளை கையாள்வதற்கென்று தனியே பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை மாநகராட்சி பகுதிகளில் 240.30 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 54.20 கி.மீ. நீளத்திற்கான கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் நேர்வுகளில் உடனடி தடுப்பு நடவடிக்கைக்காக 5000 மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதுவன்றி, போதுமாமன அளவு பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு உள்ளிட்ட சுகாதாரப் பராமரிப்பு பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், துணை ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு வட்டத்திற்கும் மொத்தம் 11 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 286 JCB-க்கள், 506 லாரிகள், 65 மர அறுப்பான்கள், 94 ஜெனரேட்டர்கள், 5 படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் 2425.19 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால்களில் அடைப்புகள் நீக்கப்பட்டதோடு, 1992.53 கி.மீ. நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர் தேங்கிய பகுதிகளுக்கு நிரந்தர தீர்வு காண தொடர்புடைய துறைகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்களின் ஒருங்கிணைப்பில் மாவட்ட நிருவாகமும், மாநகராட்சியும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.