வெள்ளத்தில் வேலைசெய்து உயிரிழந்த மின் ஊழியருக்கு ரூ.5 இலட்சம்- முதல்வர் அறிவிப்பு!

வெள்ளத்தில் வேலைசெய்து உயிரிழந்த மின் ஊழியருக்கு ரூ.5 இலட்சம்- முதல்வர் அறிவிப்பு!
மாதிரிப் படம்
Published on

அண்மையில் பெய்த பெரு மழையின்போது மின்சார இணைப்பைச் சரிசெய்வதில் ஈடுபட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மின் வாரிய ஊழியர் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“ கடந்த 01.12.2024 இரவு ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலின்போது திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்டம்பள்ளம் மின்மாற்றியில் ஏற்பட்ட மின்தடையை சரிசெய்யும் பணிக்காக வெறையூர் பிரிவிலிருந்து சென்ற மின்பாதை ஆய்வாளர் திரு.P.பாலசுந்தர் (வயது 56) மற்றும் கம்மியர் P.அண்ணாமலை (வயது 56) ஆகிய இருவரில் திரு.P.அண்ணாமலை அவர்கள் பவித்திரம் தரைப்பாலத்தைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதைத் தொடர்ந்து அவரைத் தேடியதில் நேற்று (03.12.2024) பிற்பகல் 03.00 மணியளவில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மின்சார வாரிய ஊழியர் திரு.P.அண்ணாமலை அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அண்ணாமலையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கிடவும், உயிரிழந்த அண்ணாமலையின் குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com