
தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதி தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்துவருபவர் மகேஷ் மாயவன். ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தன்னை அவமதித்துவிட்டதாகக் கூறி, கட்சிப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தி.மு.க.வில் தீவிரமாகப் பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க.விலிருந்து தாவி, தி.மு.க.வின் வேட்பாளராகவும் ஆனார். இந்நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடந்துவரும் வேளையில், கானாவூர் பகுதியில் பிரச்சாரத்தின்போது தன்னை மனோஜ் பாண்டியன் ஒருமையில் பேசியதாகவும் பிரச்சார வாகனத்திலிருந்து தன்னை இறக்கிவிட்டதாகவும் மகேஷ் மாயவன் புகார் கூறியுள்ளார்.
ஏழு ஊராட்சிகளில் நான்கு ஊராட்சிகளை செயலற்றவர்களுக்கு ஒதுக்கியதாகவும் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் பாராட்டுப் பெற்ற தான், சுயமரியாதையை இழந்து வேலைசெய்ய முடியாது என்றும் அவர் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.