வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை- சாமி நடராஜன்

வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை- சாமி நடராஜன்
Published on

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:

” புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (06.08.2026) சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 58,374 கோடிக்கு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமிழ்நாட்டில் சந்திக்கும் வேளாண் நெருக்கடிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குகிற வகையில் மாநில வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்த்தோம். நெல்லுக்கும், கரும்புக்கும், இதர விலைபொருட்களுக்கும் கட்டுபடியான விலையை ஒன்றிய அரசாங்கம் வழங்காத நிலையில் மாநில வேளாண் பட்ஜெட்டில் நெல், கரும்பு உள்ளிட்ட விளைப்பொருட்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவிக்காதது, பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது, தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி  செய்யாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. 

புதிய அறிவிப்புகளாக இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உயிர்ம பட்டய கல்வி நிலையம், சென்னையை தலைமையாக கொண்டு புதிதாக விவசாயிகள் வருவாய் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது, நெல்விதை விநியோக மானியமாக மாநில நிதியிலிருந்து 34.72 கோடி ஒதுக்கீடு, பயிறு மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை மேம்படுத்திட 203 கோடி, சிறு தானியங்கள், குறு தானியங்கள் உற்பத்தி பரப்பளவை உயர்த்துவது, மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு, புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் சேலம், தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் அமைப்பது, உழவர் சந்தைகளை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு, 57000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பது, நுண்ணுட்ட பாசனத்தை மேம்படுத்திட 2,22,794 ஏக்கரில் 95 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 785 கோடி நிதி ஒதுக்கீடு, கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டத்திற்கு 18103 கோடி ஒதுக்கீடு போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தாலும், ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோதமான சட்டங்களாக உள்ள விதைச்சட்டம் 2025, மின்சார திருத்த சட்டம் 2025 குறித்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. 

மாநிலம் முழுவதும் புதிய மின்இணைப்புக்காக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின்இணைப்பு வழங்குவது குறித்த அறிவிப்பில்லை. நீர்மேலாண்மை, நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து விரிவான திட்டங்கள் போதிய அளவு இடம் பெறாமல் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியை இழந்துள்ளனர். கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு 15 ஆயிரமும், விவசாய வேலைகளை மட்டுமே நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் துயரை துடைக்கும் வகையிலும் விவசாயத்தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரமும் அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையில் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் உள்ளது. 

எனவே, மாநில முதல்வர் நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4500 ரூபாயும் விலை, வறட்சி நிவாரணம், பயிர்கடன் தள்ளுபடி, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்.” என்று சாமி நடராஜன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com