ஸ்டாலின் மீது எடப்பாடி அபாண்டப் பழி- வைகோ சொல்கிறார்

வைகோ
வைகோ
Published on

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு. கழகத் தலைவர் ஸ்டாலின் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப் பழியைச் சுமத்தி உள்ளார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

”தன்னை ஆளாக்கி வளர்த்து வார்ப்பித்த தன் தந்தையும், கழகத்தின் தலைவருமான டாக்டர் கலைஞர் பிணிவயப்பட்ட காலத்தில் கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். கலைஞர் மறைந்தபோது, அவர் அறிஞர் அண்ணா மறைந்த வேளையில் எழுதிய நெஞ்சு உருக்கும் இரங்கல் பாவில் வேண்டிக் கொண்டபடி அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு அருகிலேயே தி.மு.கழகத் தலைவரை நல்லடக்கம் செய்ய துடியாய் துடித்தார் ஸ்டாலின். அதற்காக தன் சுயமரியாதையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கே சென்று உள்ளம் உருகும் விதத்தில் வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிச்சாமி ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம், மனிதாபிமானம் சற்றும் இன்றி தளபதி ஸ்டாலின் வேண்டுகோளை நிராகரித்து உதாசீனப்படுத்தினார்.

எந்த நிலையிலும் விடா முயற்சியைக் கைவிடாத ஸ்டாலின், வழக்கறிஞர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தை நாடி தமிழினத் தலைவர் கலைஞரை அண்ணா கண் உறங்கும் இடத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யும் தீர்ப்பை நீதியரசர்கள் வழங்கிய செய்தியை செவியுற்ற மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் மல்க நெஞ்சுருகி கதறினார். உலகெங்கும் உள்ள கோடானு கோடி தமிழர்கள் இதைக் கண்ணுற்று மனம் கலங்கினர்.
கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் சகோதரி ஜெயலலிதாவின் பாத படிகளுக்கு சேவகம் செய்த தன்மானமற்ற ஒரு நபராவார்.

இனிமேல் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை அவர் கூறுவாரானால் என் தாக்குதல்களுக்கு அவர் பதைபதைத்து பின்னங்கால் பிடரியில் அடிபட அரசியல் களத்தில் ஓட நேரிடும்.” என்று வைகோ தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com