டாஸ்மாக் வழக்கு: வரம்பை மீறிய அமலாக்கத்துறை… விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

டாஸ்மாக் வழக்கு: வரம்பை மீறிய அமலாக்கத்துறை… விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!
Published on

டாஸ்மாக் வழக்கில் அமலாத்துறை வரம்பை மீறி செயல்பட்டுள்ளதாகவும் கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளதாகவும் கூறியுள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்குத் இடைக்கால தடைவிதித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

மேலும், இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்கிறது.

இதற்கிடையே இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம்.

டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை.

தனிநபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுகவினர் வரவேற்றுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com