'டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல' எனக் கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது, “சட்டவிரோத பண பரிமாற்றம் முறைகேடு என்பது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமைக்கு எதிரானது. இதுபோன்ற குற்றச் செயல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும்.
இந்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற சோதனையை அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டை ஒரு நல்ல நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள். நீதிபதிகளை பொறுத்தவரையில், நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, அரசியல் உள்ளதாக என்பதை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. அதனால், அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம்.” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.