“அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் தரவில்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்
தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 9 பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன
மேலும், நிதிப் பற்றாக்குறை மற்றும் ஊதியப் பிரச்சினை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தலைதூக்கியுள்ளதோடு, ஆசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்த புகார்களும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகமாக கருதப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட திமுக அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?
தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை செய்யவும் எங்கள் தமிழ்நாடு பாஜக தயாராக உள்ளது! விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.