மாநிலக் கல்விக் கொள்கைகை இன்று வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்கள் நண்பர்கள் யாராவது படிப்பை தொடராமல் இருந்தால் அவர்களை மீண்டும் படிக்க சொல்லுங்கள்.” என்று கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவினர் தயாரித்த மாநில கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த 2024ஆம் ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்ததுடன், அதற்கான அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்த கொள்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
“பள்ளிக்கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா, எந்த மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்படுவதில்லை. இந்த வயதில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம்.
பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது. மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை கூறி வருகிறேன்.நீங்கள் தான் ரியல் ஹீரோ...உங்களை தூக்கி வைத்து கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது, சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கம். அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75 சதவீதமாக உள்ளது. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே இலக்கு.
சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம். உங்கள் நண்பர்கள் யாராவது படிப்பை தொடராமல் இருந்தால் அவர்களை மீண்டும் படிக்க சொல்லுங்கள். மனப்பாடம் செய்வதை விட சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். படிப்பவர்களாக மட்டுமின்றி படைப்பாற்றல் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கவுள்ளோம்.
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை கல்வி அனைவருக்கும் பொதுவானது; அங்கு யாருக்கும் பாகுபாட்டுக்கே இடமில்லைஅறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் கல்வியில் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் பிற்போக்கு சிந்தனை இல்லாமல் முற்போக்காகவும் பகுத்தறிவாகவும் கல்வி இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.