உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இமாச்சல், அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதம் அடைந்துள்ளன. முக்கிய வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தாராலி பகுதியில் கீர் கங்கை நதி பகுதிகளில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அந்தப் பகுதியில் பல காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதிகளில் ஒரு சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டடங்களில் சேதம் ஏற்பட்டது. பல வீடுகள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பொது மக்கள் நதிக்கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். பொது மக்கள் மற்றும் கால்நடைகள் நதிக்கரையோரங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, தாராலி அருகே சுகி டாப் என்ற இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.