போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தாய்லாந்து- கம்போடியா ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு!
Published on

தாய்லாந்தும் கம்போடியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்தே, தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். எந்த இரு நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவது அவரது வழக்கம். இஸ்ரேல்- ஈரான் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை சொல்லி உள்ளார்.

தற்போது, தாய்லாந்து-கம்போடியா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தான் முயற்சி செய்து வருவதாக டிரம்ப் கூறி உள்ளார். இது குறித்து, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: எல்லை மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டன.

இரு தரப்பினரும் அமைதியை நாடுகின்றனர். அதேநேரத்தில் சர்வதேச அமைப்புகள் நீண்டகால தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஸ்காட்லாந்தில், கம்போடிய பிரதமர் ஹன் மானெட் மற்றும் தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாயுடன் தனித்தனியாகப் பேசினேன்.

தொடர்ந்து சண்டையிடுவது அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் இரு தலைவர்களையும் எச்சரித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று நாட்களாக நீடித்த தாய்லாந்து- கம்போடியா எல்லை மோதல்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர் 1,30,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, டிரம்ப் நடவடிக்கை எடுத்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com