சிவகங்கையில் காவல்துறை சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சென்னை, சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசியதாவது:
“திருப்புவனம் மடப்புரம் அஜித்குமார் அவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் குடும்பத்துக்கு நடந்த கொடுமைக்கு முதல்வர் ஸ்டாலின் சாரி சொன்னார். நல்ல விஷயம். ஆனால், உங்களின் ஆட்சியில் 24 பேர் லாக்கப் டெத்தில் இறந்திருக்கின்றனர். அவர்களிடமும் சாரி சொல்லுங்கள். அவர்களுக்கும் நிதியுதவி வழங்குங்கள்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது விமர்சித்தீர்களே. இப்போது ஏன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினீர்கள். இப்போதும் சிபிஐ ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் கைப்பாவையாகத்தானே இருக்கிறது.
நாங்கள் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை கேட்டதால் பயந்து போய் சிபிஐக்கு மாற்றியிருக்கிறீர்கள். எல்லா வழக்கிலும் நீதிமன்றம்தான் தலையிட வேண்டுமெனில் உங்களுக்குப் பதவி எதற்கு? திராவிட மாடல் வெற்று விளம்பர அரசு சாரிம்மா அரசாக மாறிவிட்டது' என்று பேசினார்.