இந்தியாவை நிலைகுலைய செய்திருக்கிறது அகமதாபாத் விமான விபத்து. ஆசை ஆசையாய் எத்தனை எத்தனையோ கனவுகளுடன், நேற்று மதியம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட 241 விமான பயணிகளின் கனவும் வெறும் ஒரு நிமிடத்தில் காற்றில் கரையும் என அவர்கள் கனவிலும் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிப்பதற்குள்ளாகவே ஒட்டுமொத்த விமானமும் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதில் பலரின் உடல்கள் அடையாளமே காணப்படாத முடியாத அளவுக்கு கருகிவிட்டன. குடும்பத்தினரின் டி.என்.ஏ.க்கள் மூலம் விமான பயணிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து கேட்போரின் இதயத்தை எல்லாம் நொறுக்கிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் விமான பயணிகளின் பயண பின்னணி உணர்ச்சிகளை இன்னும் கசக்கி பிழிகிறது.
லண்டன் புறப்பட்ட குடும்பம்
பிரதிக் ஜோஷி கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார். பொறியாளரான இவர், இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை நிரந்தரமாக லண்டனுக்கு குடிபெயர்க்க அனைத்து வேலைகளையும் அண்மையில்தான் முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். நேற்று மூன்று குழந்தைகள் மற்றும் மருத்துவராக பணியாற்றிய மனைவி ஆகியோரை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பினார். அப்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். ஆனால், அந்த புகைப்படம் பகிரப்பட்டு அடுத்த சில விநாடிகளில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
கணவரை பார்க்கச் சென்ற புதுமணப் பெண்
திருமணம் ஆகி 5 மாதங்களே ஆனவர் குஷ்பூ ராஜ்புரோஹித். கணவரை பார்க்க நேற்று மதியம் லண்டன் புறப்பட்டார். வழியனுப்ப வந்த தந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து கணவரை சந்திக்கப்போகிறோம் என்ற ஆவலில் விமானத்தில் ஏறினார். ஆனால் இப்படியொரு பேராபத்து நிகழப்போகிறது என்பதை அவர் துளியும் அறிந்திருக்கவில்லை.
இங்கிலாந்து இளைஞர்கள்
லண்டனைச் சேர்ந்த யோகா ஆர்வலர் ஜேமி மீக் (45) மற்றும் ஃபியோங்கல் கிரீன்லா-மீக் (39) ஆகிய இருவரும் நேற்று விமானம் மூலம் லண்டனுக்குச் செல்வதற்கு முன் வெளியிட்ட கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு இது.
விமான நிலையத்தில் வைத்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இருவரும் ' குட்-பை இந்தியா' என்று கையசைப்பதையும், இங்கு விடுமுறையில் கழித்த மகிழ்ச்சியான நேரத்தை நினைவு கூர்வதையும் காணலாம்.
"மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் திரும்பிச் செல்கிறேன்" என்று மீக் வீடியோவில் கூறிய வார்த்தைகள் தற்போதும் எதிரொலித்தபடி இருக்கின்றன.
நிச்சயதார்த்த தம்பதிகள்
சூரத்தைச் சேர்ந்த விபூதி படேல், போடாட்டைச் சேர்ந்த ஹார்திக் அவையா இருவரும் இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்த போது காதலித்தனர். தங்களது நிச்சயதார்த்தத்துக்காக இந்தியா வந்திருந்த இவர்கள், நேற்று இங்கிலாந்து திரும்பிய நிலையில், விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.