செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Published on

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சுமார் ஒன்றரை வருட சிறைவாசத்துக்குப் பின் கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது.

இதையடுத்து செப்டம்பர் 29 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கி ஏற்கனவே வகித்த துறைகளான டாஸ்மாக், மின்சாரம் ஆகிய துறைகளையும் வழங்கினார் முதலமைச்சர்.

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருப்பதால் சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார், எனவே அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டு செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த தகவலை எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை பாலாஜி மீண்டும் அமைச்சராகக் கூடாது என நிபந்தனை விதிக்கவேண்டும்” என்று நீதிபதிகள் அபய் எஸ் ஓகே, ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வை வலியுறுத்தினார்.

“அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கிலும் இதே போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய நிபந்தனையை நீதிமன்றம் விதிக்காவிட்டால், ஒரு மாதத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிவிடுவார்” என்று கூறினார் சொலிசிட்டர் ஜெனரல்

ஆனால் நீதிபதி ஓகா, “செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டதால், உங்கள் விண்ணப்பத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறிவிட்டார்.

அப்போதும் விடாத துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை வேகப்படுத்தும் படி விசாரணைக்கு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், ஏனென்றால் செந்தில் பாலாஜி அந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துகிறார்” என்று கோரிக்கை வைத்தார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தை மறுத்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பெஞ்ச் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காமல் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com