கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டிருப்பதாவது:
“தமிழர் விரோத போக்கைத் துளியும் நியாய உணர்வு இல்லாமல் கையாண்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள். கீழடி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களின் தொன்மையை மூடிமறைக்க உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் எல்லாம், தமிழ்நாட்டு அரசின் வாயிலாக உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது கீழடி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மூலம் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து, மத்திய அரசு கருத்துக் கேட்டிருப்பது மத்திய அரசின் உள் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.