அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு தென்மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் தரப்பும் இதில் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, அது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் பழனிசாமி இந்தச் சதித்திட்டம் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதோடு, இதற்கு துணை போகிறார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டில் மக்களவைத் தொகுதி மறுவரையறை எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதே வலியுறுத்தி உள்ளேன்.
இதனால், எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும். தேர்தல் கூட்டணி அறிவிக்கும் போதே அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றன. இதபோன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் யாரும் இல்லை.
தனது ஆட்சியின் அவலங்களை மக்களவை தொகுதி மறுவரையை மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் இனியும் நம்ப போவது இல்லை. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுவரையறை குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மன நிலையில் உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலை வாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் தான் அவதிபடுகிறார்கள்.
எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடிசம், திருட்டு சம்பவ உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக கவனம் செலுத்துங்கள்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.