நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழ்த்திய உரை குறித்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கடும் எதிர்வினையாற்றியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றினார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறும்போது, “குடியரசுத் தலைவர், உரையின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை. பாவம்” என்று வருத்தப்பட்டிருந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் உடன் இருந்தனர்.
சோனியா காந்தியின் பதிலைத் தொடர்ந்து, அவரது கருத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “சலிப்பானது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரை குறித்து ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சில முக்கியமான தலைவர்கள், உயர் பதவியின் கண்ணியத்தைக் காயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தத் தலைவர்கள், “உரையின் இறுதியில் குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்து உண்மைக்கு மாறானது. எந்த நிலையிலும் குடியரசுத் தலைவர் சோர்வடையவில்லை. விளிம்புநிலை மக்களுக்காக, பெண்களுக்காக, விவசாயிகளுக்காகப் பேசும்போது சோர்வு ஏற்படாது என்று குடியரசுத் தலைவர் நம்புவது போல, அவர் தனது உரையை வாசிக்கும்போது ஒருபோதும் சோர்வடையமாட்டார். இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள சொல் வழக்குகளை இந்தத் தலைவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதால் தவறான எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகை நம்புகிறது. எனினும், எந்த நிலையிலும் இதுபோன்ற கருத்துகள் மிகவும் மோசமான ரசனை, துரதிருஷ்டவசமானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது" என்று தெரிவித்துள்ளது.