“தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102ஆவது பிறந்தநாள் இன்று செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடக்கும் செம்மொழி விழாவில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இந்த நிலையில், கலைஞர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
“தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள். முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழிநாள். ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.