மிஷ்கினை மிரட்டிய தொலைக்காட்சி நிறுவனம்!

இயக்குநர் மிஷ்கின்
இயக்குநர் மிஷ்கின்
Published on

“ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் வெளியீட்டின்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அப்படத்தின் உரிமத்தைப் பெற என்னை மிரட்டினார்கள்” என்று இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசிய அவதூறு வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளானது. இந்த விஷயத்தை குறித்து திரைத்துறையை சேர்ந்த பலரும் மிஷ்கினை கண்டித்து வீடியோவை பதிவிட்டனர். இதற்கெல்லாம் மிஷ்கின் இன்று நடந்த பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பதில் கொடுத்து பகீரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது "பாடலாசிரியர் தாமரை, லெனின் பாரதி, லட்சுமி ராமகிருஷ்ணன், சசிக்குமார், நடிகர் அருள் தாஸ், தயாரிப்பாளர் எஸ். தானு அவர்களுக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நகைச்சுவைக்கு மனிதன் பொய்யாக சிரிக்க முடியாது. பாட்டல் ராதா மேடையில் சிரித்தவர்கள் ஆழ் மனதில் இருந்துதான் சிரித்தார்கள். ஓரிரு வார்த்தைகள் எல்லை மீறி பேசிவிட்டேன்தான். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

மேடை நாகரீகம் வேண்டும் என சொல்கிறார்கள், நான் ஒரு கூத்து கலைஞர்கள் இருக்கும் மேடையில் நின்று பேசுகிறேன். சங்ககால நாடகங்களில் வசை வார்த்தை வைத்து பாடுவதில்லையா. திருக்குறளில் காமத்துப் பால் இல்லையா…? ஒரு படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாசமான டைட்டில் வைக்கப்படுகிறது அதை யாரும் கேட்பதில்லை. நன் சினிமாவையும், மனிதர்களையும் நேசித்துக் கொண்டே இருப்பவன் நான்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் வெளியீட்டின்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அப்படத்தின் உரிமத்தைப் பெற என்னை அழைத்திருந்தனர். அங்கு, என்னை அழைத்தவருடன் 20 பேர் இருந்தனர். ரூ. 75 லட்சத்துக்கு உரிமத்தைக் கேட்டனர். ஆனால், நான் ரூ. 2 கோடி கொடுங்கள் என்றேன்.

அப்போதுதான் புரிந்தது அந்த 20 பேர் தடியர்கள் என. என்னை மிரட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியபின் ரூ. 75 லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்தனர். நான் அதைக் கிழித்து வீசினேன். இதுவரை, அந்த தொலைக்காட்சி சேனலில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை 80 முறை ஒளிபரப்பியிருப்பார்கள். நான் அதையெல்லாம் சந்திந்த ஒருவன்.” ." என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com