தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வார பேட்டிக் கொடுத்திருந்தார். அவரின் இந்த பேட்டி தமிழக அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், நேற்று கள்ளக்குறிச்சியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்று பேசியிருந்தார்.
அவரின் கருத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: "தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி அமையும். கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பார். கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அமித்ஷா சொல்லும் பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நாங்கள் இணைந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
கூட்டணி கட்சிகள் இல்லாவிட்டால் திமுகவுக்கு ஓட்டு சதவீதம் என்பதே கிடையாது. திருமாவளவன் உள்ளிட்ட நபர்கள் தான் திமுகவை காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டால் திமுகவுக்கு 10 சதவீத வாக்கு வங்கி கூட இல்லை.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான கூட்டணி சிறப்பாக வெற்றி பெறும். மக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக உள்ளனர். மக்களுக்காக திமுக அரசு எந்த ஒரு செயலும் செய்யவில்லை" என கூறினார்.