தமிழ்நாடு அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை! – ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகை
Published on

துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.

வருகிற ஏப்ரல் 25, 26, 27 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஆளுநர் மாளிகையின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை இதற்கு விளக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. ஊடகங்களின் சில அறிக்கைகள், மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே அதிகாரப் போராட்டம் இருப்பதுபோல காட்டுகின்றன. இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை.

உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்கள் கலந்துகொள்ளும் மாநாடு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளையும் அனுபவங்களையும் நமது பகிர்ந்துகொள்கிறார்கள்.

மேலும், மாணவர்களுக்கு எழும் சவால்கள், வாய்ப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி குறித்து ஆலோசித்து நமது மாநிலத்திற்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அந்தந்த நிறுவனங்களைத் தயார்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கின்றனர்.

முன்னதாக, தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருந்தன. இந்த மாநாடுதான் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒன்றுசேர்ந்து பணியாற்ற வழிவகுத்தன.

ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதமே தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான ஏற்பாட்டிற்காக பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.

கற்றல், கற்பித்தல், புதுமை என கல்வி நிறுவனங்கள் சிறந்து விளங்கும் நோக்கில் நடைபெறும் இந்த துணைவேந்தர் மாநாட்டை அரசியல் நோக்கில் சில தவறான தகவல்கள் வருகின்றன.

சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புடன் தவறாக இணைத்து, ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டமாக அதைக் காட்ட முயற்சித்து வருகின்றன. இந்தத் தகவல்கள் அவதூறானவை" என்று கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com