'ராமதாஸ் நடத்தியது பொதுக்குழுவே இல்லை' – வழக்கறிஞர் பாலு

பாமக வழக்கறிஞர் பாலு
பாமக வழக்கறிஞர் பாலு
Published on

புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல எனவும், அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் அருகே பட்டனூரில் நடைபெற்றது. சங்கமித்ரா அரங்கில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவுக்கு பாமகவின் நிறுவனரான ராமதாஸ் தலைமை வகித்தார்.

இதில் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளான கௌரவத் தலைவர் ஜி.கே மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், நிர்வாக குழு உறுப்பினர் காந்திமதி என பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பொது குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனராக ராமதாஸ் தொடர்வார், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க அவருக்கே அதிகாரம் இருக்கிறது என்பன உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மக்கள் தொலைக்காட்சியை அபகரித்து விட்டார், ராமதாசை மதிக்கவில்லை என்பன உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது முன் வைத்துள்ளது.

மேலும் கட்சியின் நிறுவனர் ராமதாசை அன்புமணி மதிக்கவில்லை என பொதுக்குழுவில் பேசிய நிர்வாகிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல எனவும், அதன் முடிவுகள் பா.ம.கவை கட்டுப்படுத்தாது என வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.

அதன்படியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் நாள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com