திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் விஜய்தான், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, செயற்குழுவில் விஜய் பேசியதாவது:
“கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயத்துக்காக மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக. அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழகத்தில் எடுபடாது.
பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க திமுகவோ அதிமுகவோ இல்லை தமிழக வெற்றிக் கழகம். அவர்களுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக, பாஜகவுக்கு எதிரானதாக இருக்கும். அதில், எவ்வித சமரசமும் கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரின் வாழ்வாதாரத்துக்கு விவசாயிகள் அடிப்படையாக இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு பிறகு விவசாயிகள் பாதிக்காத வகையில் விமான நிலையம் கொண்டு வரப்படும் என்று அரசு தரப்பில் வெளியிடப்பட்டது.
நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், நீர்நிலைகளை அழித்து விமான நிலையம் கட்டுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையத்துக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் காட்டிக் கொள்கிறீர்கள். ஆனால், மாநில அரசுதான் இடத்தை பரிந்துரைத்ததாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர், அதிகாரிகளை அனுப்பாமல், பரந்தூர் விவசாயிகளை முதல்வரே நேரில் சந்தித்துப் பேச வேண்டும். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் கடந்து போக வேண்டுமென்று நினைத்தால், பரந்தூர் மக்களை நானே அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடுவேன்.
நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல, விமான நிலையங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, தேர்வு செய்த இடம்தான் தவறு என்று கூறுகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.