2026 சட்டமன்ற தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள் என்றும் ஊழல் செய்யாதவர்களை தேர்வு செய்யுங்கள் என்றும் தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
10, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:
படிப்பும் சாதனையும்தான் அதை மறுக்கவில்லை. குறிப்பாக ஒரே ஒரு பாடத்தில்தான் சாதிக்க வேண்டும் என்பது இல்லை.
நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப பெரிசு. அதில் நீங்க சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. அதனால் இப்பவே உங்க மனதை திடமாக, ஜனநாயகத்தன்மையோடு வைக்க கத்துக் கொள்ளுங்க. ஜனநாயகம் என்பது இருந்தால்தான் உலகத்தில் இருக்கிற அனைத்து துறைகளும் சுதந்திரமாக இருக்க முடியும். முறையான ஜனநாயகம் இருந்தாலே எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும்.
இதன் முதல்படிதான், உங்க வீட்டில் இருக்கிற எல்லோரிடமும் சொல்லுங்கள், அவர்களை அவரிகளின் ஜனநாயகக் கடமையை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நல்லவங்க, நம்பிக்கையானவங்க, இதுவரை ஊழலே செய்யாதவங்க யாருன்னு பார்த்து தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான், அதுதான் அந்த கடமை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்கள் நிகழ்ச்சியில் பேசும் போது, காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறார்கள் இல்லையா..? அந்த கலாச்சாரத்தை யாரும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்க பெற்றோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் என சொல்லி இருந்தேன். அதை அப்படியே பின் தொடருங்கள்.
ஆனால் அடுத்த ஆண்டு என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள். வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க… அது அத்தனையும் உங்ககிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம்தான்.. என்ன பண்ண போறீங்க? என்ன பண்ணனும்னு உங்களுக்கு கரெக்ட்டா தெரியும். அதை நான் சொல்லித்தான் புரிய வைக்கனும் என்கிற அவசியம் இல்லை.
மை டியர் பேரண்ட்ஸ், உங்ககிட்ட சின்ன வேண்டுகோள்..உங்க குழந்தைகள் விஷயத்தில் எந்த அழுத்தமும் தராதீங்க.. அவங்களுக்கு என்ன பிடித்திருக்குன்னு தெரிந்து வழிநடத்துங்க.. கண்டிப்பாக சொல்றேன்.. எத்தனை தடைகள் வந்தாலும் அவங்க அவங்களுக்கு பிடிச்ச விஷயத்தில் கண்டிப்பாக அவங்க சாதிச்சு காண்பிப்பாங்க.
ஜாதி, மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற அந்த சிந்தனை பக்கமே போயிடாதீங்க..அந்த சிந்தனை உங்களையோ உங்கள் மனதையோ பாதிக்கும் அளவுக்கு கொண்டு போக விடாதீங்க.. விவசாயிகள் ஜாதி மதம் பார்த்தா பொருளை விளைவிக்கிறாங்க? தொழிலாளர்கள் ஜாதி மதம் பார்த்தா பொருளை உற்பத்தி செய்யுறாங்க?
இவ்வளவு ஏன் இயற்கையான வெயில், மழையில் ஜாதி இருக்கா? மதம் இருக்கா? போதைப் பொருட்களை அறவே ஒதுக்கி வைப்பது போல, ஜாதி மதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். இவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு தூரமாக ஒதுக்கி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது.
அண்மையில் தந்தை பெரியார் அவர்களுக்கே, ஜாதி சாயம் பூச முயற்சிக்கிறாங்க.. ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட, பெரியாருக்கு ஜாதி சாயம் பூசுகிற மாதிரி கேள்வி கேட்டு வைத்துள்ளார்கள். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எது சரி, எது தவறுன்னு அனாலிசிஸ் செய்து பார்த்தாலே அழகான வாழ்க்கை வாழலாம். உணர்ச்சிவசப்படாதீங்க. டெக்னிக்கல், சயின்ட்டிபிக் அப்ரோச் உடன் சிந்திக்கவும். ஏ.ஐ. உலகத்துக்கு வந்துட்டோம். நாம் எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதை பார்த்துவிடமாட்டோமா.. எவ்வளவோ சந்தித்துவிட்டோம்.. இதை சந்திக்கமாட்டாமோ என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.” இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.