தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாமக வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மும்முனைப் போட்டியா? அல்லது நான்கு முனைப் போட்டியா? என்றும் யார் யார் கூட்டணி என்றும் பரபரப்பு தொற்றத் தொடங்கியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “1999இல் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது. அதேபோன்று 2001 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. நீங்களும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தீர்கள். நாங்களும் கூட்டணி வைத்தோம்.
நீங்களும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தீர்கள். நாங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தோம். நீங்கள் பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள். இப்போது நாங்கள் பாமகவுடன் கூட்டணியில் உள்ளோம். அவர்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கின்றனர். அவர்கள் நிச்சயமாக நம்மோடு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
நீங்க எந்தெந்த கட்சியோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி வச்சீங்களோ, நாங்களும் அந்தந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது. மக்களவைத் தேர்தலைப் போல எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டார் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருக்கு பயம் வந்துவிட்டது” என்றார்.