மூக்குத்தியில் பிட் வைக்க முடியுமா? என்னய்யா பித்தலாட்டமா இருக்கு?- சீமான்

NTK Seeman
நாதக சீமான்
Published on

நீட் தேர்வு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது, மாணவியின் ஆடையிலிருந்து பட்டன் நீக்கப்பட்ட சம்பவம், வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம், பெண்கள் அணிந்திருந்த தாலி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த சீமான் நீட் தேர்வு கட்டுப்பாடு குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது:

“நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் பெறப்பட்ட கையெழுத்துகள் எங்கே கொடுக்கப்பட்டன? சிற்றூரில் இருக்கும் மாணவருக்கு மருத்துவக் கனவு வரக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வு.

நீட் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி என்ற பெயரில் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். வட மாநிலங்களில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதுகிறார்கள். என்னிடம் ஆதாரம் உள்ளது.

மூக்குத்தி, தோடு ஆகியவற்றில் பிட் எடுத்துச் சென்று நீட் தேர்வெழுத முடியுமா என்ன? மூக்குத்தியில் பிட் வைக்கலாம் எனில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதா? நீட் தேர்வு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறோம். அதற்கு யாரிடத்திலும் பதில் இல்லை.

நீட் தேர்வு எழுதினாலே தரமான மருத்துவராக வர முடியுமா என்ன? மற்ற மாநிலங்களில் இல்லாத கெடுபிடிகள் என் மாநிலமான தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏன் இத்தகைய கொடுமைகள் நடக்கிறது.

அரைஞாண் கயிறை அறுக்கச் சொல்கிறார்கள்,பூணூல்-ஐ கழற்ற சொல்கிறார்கள். தாலியைக் கழற்ற சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஜனநாயக நாடா? விரும்பிய கல்வியைப் படிப்பதற்கு இந்த நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது. கல்வி ஏன் சுமையாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com