திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
நெல்லையப்பர் கோயிவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில முதல்வருடன் பேசப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றுசேர வேண்டும். பாஜக கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் பாகுபாடின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓரணியில் திரள வேண்டும்.
பாஜக - அதிமுக கூட்டணி உடைந்துவிடும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் எண்ணம். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதே தனது விருப்பம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் களத்தில் உள்ளார். தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலானவற்றை முதல்வர் நிறைவேற்றாத நிலையில், சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்போது பல்வேறு எதிர்ப்புகள் இருப்பது இயல்புதான். ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது, தற்போது தங்க நகைக்கான பல்வேறு விதிமுறைகளும் சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும்.” என்றார்.